மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று பொதுக்கூட்டம் : 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நடத்தும் பொதுக்கூட்டத்தில் 22 கட்சிளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட் உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகின்றனர். முதலில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதன் பிறகு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இதில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி மேற்கு வங்காள முதல்அமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இதற்கிடையே ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும்  இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆந்திர முதல்அமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,பிரபுல்படேல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர். கனிமொழி மற்றும் ராஷ்டீ ரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சிகள் பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்துள்ளனர். கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Posts