மத்திய அரசு அளித்துள்ள வரைவு திட்டத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும்

காவிரி வழக்கில் மத்திய அரசு அளித்துள்ள வரைவு திட்டத்தை மாநிலங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-15

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அன்னை சத்யா நகரில், அதிமுகவால் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை திறந்துவைத்தார். அப்போது, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். மேலும், பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். காவிரி வழக்கில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கையை மாநிலங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வரைவு திட்டத்தில் உள்ள அம்சங்களை சட்ட வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts