மத்திய அரசை நம்பினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது: தமிழக அரசு காட்டம்

 

மத்திய அரசை நம்பினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்றும் தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது  என்றும் காவிரி வழக்கில் வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்கம் போல தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு வழக்கறிஞர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்தே மத்திய அரசை நம்பினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்றும் தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறதுஎன்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்,. அப்போது வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் குறித்து தங்களால் எந்த இறுதி முடிவையும் எடுக்க இயலவில்லை என்று விளக்கினார்.. காவிரி வரைவு திட்டத்தை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டுமானால் 10 நாட்கள் அவகாசம் வேண்டும்  என்றும் அவர்  கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் வரும் 14 ஆம் தேதி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதுகுறித்து உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன், காவிரி வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் பொறுப்பற்ற முறையில் வாதிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

Related Posts