மனித உயிர்களை காப்போம் : எடப்பாடி பழனிசாமி

தேசிய தன்னார்வ இரத்ததான நாளில் ரத்த தானம் செய்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித நேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக விளங்கும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியில் தேசிய தன்னார்வ இரத்ததான நாள்கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார். இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, எண்ணற்ற இரத்ததான முகாம்களையும்,  இரத்த தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானங்களில் சிறந்தது இரத்த தானம் என்பதால், அது குறித்து தமிழக அரசு மக்களிடம் பெருமளவில்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ இரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.நடப்பாண்டில் தன்னார்வ இரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Related Posts