மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன்

குட்கா ஊழல் தொடர்பாக மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

            தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்குன்றம் அருகே உள்ள குட்கா கிடங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட பொது நாட் குறிப்பில் அமைச்சர் விஜய பாஸ்கர், காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த விவகாரம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள்  நீதிமன்ற அனுமதியுடன் அவர்களை  4 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் மற்றும் செங்குன்றம் ஆய்வாளராக பணிபுரிந்த சம்பத் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. குட்கா ஊழல் நடைபெற்ற கால கட்டத்தில் மன்னர் மன்னன் செங்குன்றம் சரக உதவி ஆணையராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக காவல்துறையிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts