மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேர் வெட்டிக்கொலை 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவை சேர்ந்தவர்இளங்கோவன்.  இவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்த கிராமத்தின் நாட்டாமையாகவும், அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் நாட்டாமையாக நீடிக்க அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இரண்டு தரப்பிலும் தலா இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கீழத்தெரு கோவிலில் அமர்ந்து இளங்கோவன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பிரபாகரன், பூமிநாதன், இளவரசன், எழிலரசன், இளையராஜா, பாலு, பிரேம்குமார், தங்கமணி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த  வேல்முருகன் தரப்பை சேர்ந்த கண்ணதாசன், புகழேந்தி, மோகன், முருகையன், மதி, திருமுருகன், நவீன், கிஷோர் உள்ளிட்ட 15 பேர் இளங்கோவன் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருக்கட்டத்தில் வேல்முருகன் தரப்பினர் தாங்கள்  மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு இளங்கோவன் தரப்பினரை தாக்கினர். இதில் இளங்கோவன் தரப்பை சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் இளவரசன், தங்கமணி இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாகை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்

விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க

போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts