மய்யம் விசில் வரும் 30ம் தேதி அறிமுகம்: கமல் வீடியோ வெளியீடு

 

 

மக்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர ‘மய்யம் விசில்’ எனப்படும் செல்போன் செயலி வரும் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-26

கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், மக்கள் தங்கள் பிரச்சினைகளை அவர்களே வெளிப்படுத்தி தீர்வு காணும் வகையில் ‘மய்யம் விசில்’ எனப்படும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி அந்த செயலி வரும் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காற்று மாசுபாடு, நீர்நிலைகள் மாசுபாடு, குப்பைகள் சரிவர அகற்றப்படாதது, ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் முதல் பிரச்சினை. உங்களை பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி நிற்காமல் ‘மய்யம் விசில்’ செல்போன் செயலியை டவுன்லோடு செய்து பிரச்சினைகளை தெரிவியுங்கள்” என கமல்ஹாசன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “விசில், அது எப்படி கேட்காமல் போகும்?” என அந்த வீடியோவில் கமல்ஹாசன் இறுதியாகப் பேசியுள்ளார்.

Related Posts