மருத்துவத்துறை வணிக நோக்கத்துடன் இருக்க கூடாது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

 

 

மருத்துவத்துறை சேவையாக இருக்க வேண்டுமே தவிர வணிக நோக்கத்துடன் இருக்கக்கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவின் மலரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது என குறிப்பிட்டார். மருத்துவம் என்பது சேவையாக இருக்க வேண்டும் என்றும், குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரக மாற்று, இருதய அறுவை சிகிச்சை பிரிவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். பின்னர் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம்குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார்.

 

Related Posts