மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம்

சென்னையில் மறுமலரச்சி திராவிட முன்னேறக் கழக தலைமை அலுவலத்தில் மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், பொறியாளர் மு. செந்திலதிபன் மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க. அழகுசுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றத்தில், காஷ்மீர் பிரச்சினை, முத்தலாக் சட்டப் பிரிவு, சட்ட விரோத தடுப்பு மசோதாக்களில் கம்பீரமாக முழக்கமிட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு மாணவர் அணி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பெருமை கொள்வதாக முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற கிளைகளை உருவாக்கி, 2020 ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும், ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாடு’ நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில், கழக மாணவர் அணியினர் ஐந்தாயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்றுச் சிறப்பிப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிடப் பேரியக்கத்தின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்தும், தமிழக வாழ்வாதாரங்கள் பற்றியும், தமிழின வரலாறு குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுதற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு மாணவர் அணி செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்போக்குச் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமான 10 விழுக்காடு ஒதுக்கீடு முறையை அகற்றிட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற்றிடவும், கல்வியை முழுமையாக மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு வருவதற்காகவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி, தொடர்ந்து போராடுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கல்வியாளர்களின் கருத்தை கேட்காமலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்காமலும், அவசர அவசரமாக சங் பரிவார் கூட்டத்தின் நிர்பந்தத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையால் கேடுகளே மிகுதி என்பதால், இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Posts