மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

20 மாவட்ட மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை: மே-31

தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா, ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்ளிட்டோர் மலைகிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 20 மாவட்டங்களில் உள்ள  மலைவாழ் மக்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாவட்ட அளவில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், அதற்கான  ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் மத்திய அரசு உதவியுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சேலம் மாவட்டம் சங்ககிரி, எளம்பிள்ளை சித்தர் மேல்மலை கோவிலுக்குச் செல்ல மலை மீது புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோல், கொல்லிமலை பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

பேரிடர் காலங்களில், மீனவர்கள் உள்பட 2 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பில், பேரிடர் கால பயிற்சி வழங்கப்பட்டது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மீனவர்கள் உட்பட ஏராளமானோருக்கு பேரிடர் பாதுகாப்பு, முதலுதவி மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

சட்டப்பேரவையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தன்னிச்சையாக நடைபெற்றது என்று கூறினார். மேலும், தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Posts