மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அரசுஅனுமதி 

9 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளில் மோசடிவிட்டு  லண்டனுக்கு தப்பிய மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அரசுஅனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

 கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு  மேல் நிலுவையில்  உள்ளது. இதை மீட்க வங்கிகள் போராடி வருகின்றன. அவர் மீது கடன் பாக்கி மட்டுமின்றி, வரி பாக்கி, அந்நிய செலாவணி முறைகேடு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.   கடனை அடைக்க முன்வராத மல்லையா, கடந்த 2016 மார்ச் 2ம் தேதி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஓராண்டு விசாரணைக்கு பிறகு, கடந்த டிசம்பர் 10ம்  தேதி தீர்ப்பு அளித்த நீதிபதி, விஜய்மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதாக மல்லையா அறிவித்திருந்தார். இதற்கிடையே, நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வந்தது.  இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் நேற்று அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.. இருப்பினும், இந்த உத்தரவுக்கு எதிராக மல்லையா தரப்பு மேல் முறையீடு செய்ய 2 வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts