மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன்

 

மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோட்டில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  இதில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பெண் பயனாளிகளுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதல்முறையாக பாலித்தீன் பயன்படுத்தாத ஒரு முன்னோடி மாநிலம் என்ற சிறப்பைப் பெற, தமிழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் கல்வித்துறையை பொறுத்தமட்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் நான்கு வகையான இலவச சீருடைகள் வழங்கப்படும் எனவும், 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வு கூடமான அடல் லேப் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மழைக்காலத்தில் எவ்வாறு பள்ளிக்கு வந்து செல்வது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related Posts