மாணவர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

 

 

 

நீட் தேர்வை திணித்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாணவர்கள் பொங்கியெழுந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புதுச்சேரி, மே-07 

புதுச்சேரியில் மறுமலர்ச்சி திமுகவின் வெள்ளி விழா பொதுக்கூட்டம் சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்றது. இந்த விழாவின் போது, 200க்கும் மேற்பட்டோர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், கட்சியில் இணைந்தனர். பின்னர் பொதுக்கூட்ட மேடையில், வைகோ 25 கிலோ கேக்கை வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜாதி, மத பிரச்சனைகளுக்கு மதிமுகவில் இடம் இல்லை என்றார். தமிழர்கள் உரிமையை காக்க, இளைஞர்கள் அனைவரும் மதிமுகவில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது ;-

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஆளுநரான கிரண்பேடி அனைத்துத் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதோடு போட்டி அரசாங்கத்தையும் நடத்தி வருகிறார். இது ஜனநாயகத்துக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. ’நீட்’ தேர்வு முறை சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயல். அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்து விட்டனர். சி.பி.எஸ்.இ முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நீட் தேர்வு முறையைக் கொண்டு வந்திருக்கின்றனர். நீட் முறையில் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையங்களை தமிழகத்தில் ஒதுக்காமல் கேரளா, ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அதன் விளைவாக கேரளா சென்ற மாணவன் ஒருவனின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். அதற்கு யார் பொறுப்பு? தமிழக அரசு அந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு தருவதாகவும், அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது. அந்த மாணவன் டாக்டராக வேண்டுமென்பதுதான் அவன் தந்தையின் கனவு. நீட் தேர்வு காரணமாக அனைத்துப் பெற்றோர்களும் மனமுடைந்திருக்கின்றனர். அதேபோல தேர்வெழுதச் சென்ற மாணவிகளுக்குச் சோதனை என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை இழைத்திருக்கின்றனர். அதேபோல தேர்வெழுதச் சென்ற மாணவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தங்கியிருக்கின்றனர். மேலும் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் தவித்திருக்கின்றனர். இப்படியான சூழலில் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆங்கிலேயர் காலத்தில்கூட இப்படியான அநீதி நடைபெறவில்லை. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் நடைபெறுகிறது. மாணவர்களின் சீற்றம் அரசியல் கட்சிகளைத் தாண்டி சீற்றமாக வெளிப்பட வேண்டும். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மாணவர்கள் சமுதாயம் பொங்கி எழ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Posts