மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது : சென்னைப் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

பேராசிரியர்கள் மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என்ற கடும் எச்சரிக்கையுடன் சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தை பாலியல் துன்புறுத்தலற்ற இடமாக மாற்ற தீவிர கவனம் செலுத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அறிவுசார் இடமே தவிர பாலியல் துன்புறுத்தலுக்கான இடம் அல்ல என்றும் அது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படுபவர்கள் பல்கலைக் கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையிலான புகார் குழுவிடமோ, பதிவாளரிடமோ, துணைவேந்தரிடமோ எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மாணவிகளையோ மற்ற பெண்களையோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் துணைவேந்தர் அறைக்குச் சென்று புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவியரை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என்றும் அதுபோன்ற நடவடிக்கை பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கீனமாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவிகள் பேராசிரியர்களின் வீடுகளில் தங்கக் கூடாது என்றும் பேராசிரியர்கள் தலைமையில் தனிப்பட்ட கல்விச் சுற்றுலா செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவிர்க்க முடியாத தருணங்களில் பேராசிரியர்களுடன் மாணவிகள் செல்ல பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts