மாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011ஆம் ஆண்டு மாதவரத்தில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை கடந்த 10 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுவரையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், ஐதராபாத், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய அடுக்கு மாடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கும் மாநரக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Related Posts