மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம்,  வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுகவைச்  கே.ஆர்.அர்ஜுனன், வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த , டி. ராஜா, ஆகிய 5பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், திமுக உறுப்பினரான கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலமும் முடிவடையும் சூழலில் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.இதனால், தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 8- ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற 11-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு தேவைப்படும் பட்சத்தில் 18-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுகவுக்கு 3 இடங்கள், திமுகவுக்கு 3 இடங்கள் என சரிசமாக கிடைக்கும். அந்த வகையில், திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக  இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி மீதியுள்ள  ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts