மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைகளையும் ஒன்று போல பாரமரித்து, பாதுகாப்பதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், நாட்டில் உள்ள 92 சதவிகித அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் தான் கட்டுப்பட்டுள்ளன என்றார்.

இதனால் அணைகளை பாதுகாப்பதில் ஏற்படும் சிக்கல்களை களைய தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.அணைகளை பராமரிப்பதில்  மத்திய அரசின் பங்கு முக்கியம் என்ற அவர், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.

ஆனால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சவுத்திரி, சசிதரூர், கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேம சந்திரன், திமுக உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.  ‘‘இந்த மசோதாவில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும், அணைகளுக்கான தேசிய ஆணையத்தில் யார் யார் பங்குதாரர் என்ற விவரம் கூட இடம் பெறவில்லை’’ என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

நீர், நிலம் போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மசோதவை கொண்டு வந்துள்ளதாக கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Posts