மார்க்சிய பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்துவின் துணைவியார் சுசிலா அம்மையார் மறைவுக்கு  வைகோ இரங்கல் 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த பெரியாரியல் அறிஞருமான வே.ஆனைமுத்துவின் வாழ்க்கைத் துணைவியார்  சுசிலா அம்மையார் நேற்று மறைவுற்றார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆறாத் துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.  பெரியார், அண்ணா அவர்களின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர்களில் ஒருவரும், திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவருமான  ஒருங்கிணைந்த தென் ஆற்காடு  மாவட்டத்திலும், புதுவை மாநிலத்திலும் திமுகவை கட்டிக் காத்த பெருமைக்குரிய ஏ.கோவிந்தசாமியின் சகோதரர் சுப்பிரமணி, தையல்நாயகி ஆகியோரின் பாச மகள்தான் சுசிலா அம்மையார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வே.ஆனைமுத்து – சுசிலா அம்மையார் திருமணத்தைக்கூட மறைந்த ஏ. கோவிந்தசாமிதான் தலைமையேற்று நடத்தி வைத்தார் எனவும், பன்னீர் செல்வம், தமிழ்ச் செல்வி, வீரமணி, வெற்றி, அருள்மொழி, கோவேந்தன் ஆகிய புதல்வர்களைப் பெற்றெடுத்த தசுசிலா அம்மையார் தனது கணவர் வே.ஆனைமுத்துவின் பொதுவாழ்க்கைப் பயணம் முழுமையாக வெற்றிபெற தோன்றாத் துணையாக நின்று பணியாற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அய்யா வே.ஆனைமுத்து, திராவிடர் கழகத்தில் பெரியாரின் தளபதியாகப் பணியாற்றினார் எனவும்,  அதன்பின்னர் பெரியார் சமஉரிமைக் கழகம், மார்க்சிய – பெரியாரிய பொதுஉடைமைக் கட்சி ஆகிய அமைப்புக்களின் மூலம் பெரியார் கொள்கைகளை தமிழகத்தில் மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் பரப்பிடவும் குறள் நெறி, சிந்தனையாளன் ஆகிய இதழ்களின் மூலம் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிடவும், தமிழ் ஈழ மண்ணுக்கே சென்று விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளைச் சந்தித்து ஆதரவு தரவும், மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேற்றம் காண வட இந்தியாவில் கிளர்ச்சிகளை நடத்திடவும் வே.ஆனைமுத்துக்கு முழுமையாகச் சுதந்திரம் அளித்து, குடும்பப் பணிச் சுமைகளைத் தாமே பொறுப்பேற்றுக்கெண்டு இல்லறம் எனும் தூய தொண்டறத்தை இறுதி மூச்சு அடங்கும் வரை தொடர்ந்து செய்தவர்தான்  சுசிலா அம்மையார் என அவர் புகழாரம் சூட்டினார். சுசிலா அம்மையார் மறைவிற்கு அஞ்சலியையும், அவரது பிரிவால் துயருற்று இருக்கக்கூடிய வே.ஆனைமுத்து மற்றும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் மதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  .

 

Related Posts