மிக்செல்லை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட மிக்செல்லை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. .3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் தரகுத் தொகை வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில்  இந்திய முன்னாள் விமானப்படை அதிகாரி தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ அமைப்பும் 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.  இதற்கிடையில்,மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிறிஸ்டின் மைக்கேலை இந்தியாவுக்கு கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Posts