மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சோதனை அடிப்படையிலான மின்சாரப் பேருந்து சேவையை, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் வரை A1 என்ற வழித்தடத்தில் இந்த மின்சாரப் பேருந்து இயக்கப்படவுள்ளது.

மின்சார பேருந்து ஒன்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்தனர். அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேருந்தின் நீளம் 9.2 மீட்டர், அகலம் 2.6 மீட்டர். பேருந்தில் 32 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 25 பேர் வரை நின்று பயணம் செய்யலாம்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண் போலீசாருக்கு என பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள அம்மா பேட்ரோல் வாகனம், தக்காளியை கூழாக்கும் இயந்திரம் கொண்ட பிரத்யேக வாகனம் ஆகியவற்றையும் முதலமைச்சர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து காவல்துறையினரின் சீருடையில் பொருத்துவதற்கான கண்காணிப்பு கேமராக்களை முதலமைச்சர் வழங்கினார்.

Related Posts