மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு  பாதுகாப்பு 

தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரையிடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 38 மையங்களில் வரும் மே 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. . சென்னையில் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், குயின்மேரிஸ் கல்லூரி ஆகிய 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடசென்னை மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள 7 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறைக்கும் 4 துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மூன்று உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பணிகளில் மொத்தம் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்  சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Related Posts