மின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்: தங்கமணி

 

 

 

மின்சாரத்துறை டென்டர்களில் குறைகள் இருப்பதாக கூறப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா , அம்மா உடற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மின்துறை அமைச்சர் தங்கமணி  திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி கூறுகையில், விளை நிலங்களில் உயா் மின் அழுத்த கோபுரம் அமைப்பது தொடா்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் உயா் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும். யூனிட் 10 ரூபாய் 15 ரூபாய் என்ற விலையில் கடந்த காலத்தில் மின்சாரம் வாங்கப்பட்டது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது குறைந்த விலைக்கு தான் மின்சாரம் வாங்குகிறோம். தேசிய மின் கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையில் தான் வாங்கப்படுகிறது.

மின்வாரியத்தில் டெண்டர் அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் இ-டெண்டா் முறையில் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு, பணி இடமாறுதல்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எந்த டெண்டரில், எந்த குறைபாடு இருந்தாலும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

பூமிக்கடியில் மின்சாரக் கம்பிகள் அமைக்கும் பணி மட்டுமின்றி, மின்சாரத்துறை தொடர்பான அனைத்துப் பணிகளுமே வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Related Posts