மீண்டும் விளையாட தயார் : அம்பத்தி ராயுடு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தான் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடுவுக்கு உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான போட்டியில் விளையாட சென்னை வந்த அவர், தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூறினார். அது ஏமாற்றத்தால் எடுத்த முடிவு, இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என முடிவு செய்துள்ளதாக ராயுடு தெரிவித்தார். இதுபற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் அனுப்பியுள்ள மெயிலில், ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாகக் கூறியுள்ளார். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலும் ஆட தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கடினமான நேரத்தில் தனது மனதை மாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Related Posts