மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கௌரவித்தார்

கேரளாவில் மழை வெள்ளத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கௌரவித்தார்.

கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.  மழை வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்  இடைக்கால நிவாரண நிதியாக 600 கோடிரூபாய்  வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா வந்தார்.  திருவனந்தபுரம் வந்த ராகுலை விமான நிலையத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,மாநிலங்களவை உறுப்பினர் சசிதரூர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கனூர் பகுதிக்கு சென்ற ராகுல் முகாம்களில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.தொடர்ந்து ஆலப்புழா சென்ற அவர், வெள்ளச்சேதங்களை பார்வையிட்டார். இதை தொடர்ந்து, கேரள மீனவர்களுக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ராகுல், வெள்ளத்தின் போது மீட்புபணிகளில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களை கௌரவித்தார்.

கேரளாவின் உட்புற கிராமங்களில் ஏற்பட்ட மழை சேதங்களையும் ராகுல் காந்தி பார்வையிட உள்ளார். நாளை கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல், அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்பு  மாலை டெல்லி புறப்படுகிறார்.

 

 

Related Posts