முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.. அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் , அனல் பறக்கும்  பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக  பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது. மேலும், குறுந் தகவல்கள், முகநூல், சுட்டுரை, தொலைக்காட்சி, வானொலி போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் இன்று மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts