முதலமைச்சர் எடப்பாடியுடன் மேலும் மூன்று அமைச்சர்கள் நியூயார்க் செல்ல உள்ளனர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 2-ஆம் தேதி நியூயார்க் செல்ல உள்ள நிலையில், அவருடன் மேலும் மூன்று அமைச்சர்கள் இணைந்து கொள்ள உள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளிநாடு சென்றுள்ளார். இவர்கள் தவிர மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடு செல்ல உள்ளனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். அத்துடன் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதனை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் ஃபின்லாந்திற்கும், செய்தி விளம்பரத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ மொரிஷீயசுக்கும் சென்றுள்ளனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோஃபர் கஃபீல், சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் பங்குபெற ரஷ்யா சென்றுவிட்டு சில தினங்களுக்கு முன்தான் தமிழகம் திரும்பினார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, வரும் 1-ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார். அவருடன் இணைந்து கொள்ள  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் அமெரிக்கா செல்ல உள்ளனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர்கள் நாளை புறப்பட்டு செல்ல உள்ளனர்.

Related Posts