முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது

முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-29

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுகவினருக்கு அனுமதி மறுத்துவிட்ட சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.

முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப்படுத்துவதாக உள்ளது எனவும் குறைகூறினார். ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்று குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் பற்றி மு.க.ஸ்டாலின் கூறியது, முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்யும் வரை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறிவிட்டு, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என்றும் அவர் கூறினார்.

 

 

Related Posts