முதல்வரின் காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூர் மற்றும் உதகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.  குன்னூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு உதகைக்கு சென்ற முதல்வரின் கார் அணி வகுப்பை பின் தொடர்ந்து சென்ற வாகனத்தை எல்லநள்ளி அருகே தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி கட்டுக்கட்டாக இருந்த 17 லட்சத்து 11 ஆயிரத்து 583 பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். இதனை அடுத்து பணத்தை  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 இது குறித்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும் உதகை கோட்டாட்சியருமான சுரேஷ் கூறுகையில்,  பறிமுதல் செய்யப்பட்ட பணம்  ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும்,  உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Related Posts