முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக கருணாஸ் வருத்தம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

         நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும்,காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார் என்றார்.  ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் கூறினார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டுதன்னை விமர்சனம் செய்யுங்கள் என்றார்.. தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்ததாக கூறிய அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். கூவத்தூர் சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ததைப் போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்ததாக கூறினார்.  குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்காக வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

Related Posts