முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

        சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க அங்கு 605 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

       இந்தியா-சீனா எல்லையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பவான் சாம்லிங், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

       உலகிலேயே முதன்முறையாக இந்த புதிய விமான நிலையத்தின் தடுப்புச் சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 30 மீட்டர் அகலத்தில் சுமார் 1புள்ளி75 கிலோ மீட்டர் நீளத்துக்கு இங்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 0 புள்ளி 75 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் விமானப்படை விமானங்களும் இங்கு தரையிறங்கலாம். மேலும், விமானங்களை நிறுத்தி வைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல 116 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 106 மீட்டர் நீளத்தில் 76 மீட்டர் அகலத்தில் இரு பெரிய விமானங்களை நிறுத்தி வைக்கும் இடமும் இங்குள்ளது. 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய நிர்வாக கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அக்டோபர் நான்காம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது

Related Posts