முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்தலாக் தடைச் சட்டம் அரசியல் அமைப்பின் அடிப்படையில் செல்லுமா என தீர்மானிக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முத்தலாக் குற்றமாகவே கருதப்படாத நிலையில், தற்போதைய புதிய சட்டத்தின்படி கலவரம் செய்தல், ஆட்கடத்தல், இருதார மணம், லஞ்சம், உணவுக் கலப்படம் உள்ளிட்ட குற்றங்களை விட மோசமான குற்றமாக கருதப்படுவதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும் நிலையில், முத்தலாக் தடை சட்டத்தில், ஜாமீன் இல்லா 3 ஆண்டு சிறைத் தண்டனை என்பது பாரபட்சமான மற்றும் அதிகப்படியான தண்டனை என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அபோபோது ஆஜரான வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், அடுத்தடுத்து மூன்று முறை தலாக் கூறுவதற்கு, அரசியலமைப்புச் சட்டப்படி மதிப்பில்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே முத்தலாக் கூறினாலும், சம்மந்தப்பட்ட நபர் சட்டப்படி அந்தப் பெண்ணின் கணவராகவே கருதப்படுவார் என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Posts