முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.

பாஜக மூத்த தலைவரான அருண் ஜெட்லி, கடந்த மோடி அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்புகளை வகித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவர் நடப்பு அரசில் அமைச்சராக பொறுப்பு வகிக்க விருப்பம் இல்லை என்று கூறி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 66 வயதான அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

பிரதமர் அமைச்சர்கள் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சென்று சந்தித்தனர். இந்த நிலையில், இன்று 12.08 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்த அருண் ஜெட்லி, கட்சி வேறுபாடு இன்றி பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, தற்போதைய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில் அருண் ஜெட்லியின் பணி இன்றியமையாதது.

பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ம் தேதி காலமான நிலையில், அருண் ஜெட்லியின் மரணம் அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts