முப்பெரும் விழா மாநில மாநாடு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
முப்பெரும் விழா மாநில மாநாடு
ஈரோடு – செப்டம்பர் 15, 2018

தீர்மானங்கள்

 

தீர்மானம் எண்: 1

தமிழ் மொழி, இன, பண்பாடு, சமூக, அரசியல் விடுதலைக்காகப் போராடிய திராவிட இயக்கம். ஒரு நூற்றாண்டைக் கடந்து சாதனைச் சரித்திரம் படைத்து இருக்கின்றது. இந்தியத் துணைக் கண்டம்  முழுமையும் ‘சமூகநீதி’யின் வெளிச்சம் படருவதற்கு அடித்தளமாக அமைந்து இருக்கின்றது.

நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய திராவிட இயக்கத்தின் முதல் மூவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களும், கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களுக்கு, சமூக நீதி, வடமொழி-இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு, ஈழத் தமிழர் நலன் போன்ற கோட்பாடுகளுக்கு எதிரான அறைகூவல்கள் எழுந்து இருக்கின்றன.

திராவிட இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த கோட்பாடுகளைச் சிதைத்து எப்பாடுபட்டாவது, தமிழ்நாட்டில் கால் ஊன்றி விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் பலவகைகளில் முயற்சித்து வருகின்றது.

கடந்த நான்கரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதித்து வருவதுடன், சிறுபான்மை, தலித், பழங்குடி இன மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று கூறிக்கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்கும் கொடுஞ்செயலில் இறங்கி உள்ளது.

நாட்டின் பன்முகத் தன்மை, மதச் சார்பின்மைத் தத்துவம் போன்றவற்றிற்கு, இந்து மதவெறி அமைப்புக்களால் தொடர்ந்து பேராபத்து விளைவிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. சர்வாதிகார, பாசிச ஆட்சி நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, காவிரி உள்ளிட்ட, தமிழகத்தின் உயிர் ஆதாரமான பிரச்சினைகளில்  தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்து விட்டது.

மீத்தேன் எரிவாயு, பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை வலுக்கட்டாயமாகச் செயற்படுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. நியூட்ரினோ உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் அழியும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது.

மத்திய அரசின் ‘முகவரான ஆளுநர் மூலம் நேரிடையாக ஆட்சி செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டு, கூட்டு ஆட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து வருகின்றது.

மக்கள் ஆட்சித் தத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அ.இ.அ.தி.மு.க., அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என்று இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது.

தீர்மானம்  எண். 2 :

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 76-ஆம் திருத்தத்தின் மூலம், 9-ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு அளிக்கும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ கூடாது என்று நாம் வலியுறுத்தி வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ முறையைக் கொணர வேண்டும் என்றும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 77-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுவதும் ‘சமூக நீதி’க் கொள்கையை முடமாக்கும் முயற்சிகள் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துவதுடன், மத்திய அரசுப் பள்ளிகளில் பிற்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 3 :

1964-ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி மாணவராக பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, ஓயாத கடல் அலைகளென, உலகத் தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்ற,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பொது வாழ்வில் அரை நூற்றாண்டுக் காலத்தைக் கடந்து இருக்கின்றார்.

1965-இல் மூண்டு எழுந்த மொழி உரிமைப் போர்க்களத்தில் மாணவர் படையின் முன்னோடித் தளகர்த்தராக விளங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரம் மிக்க முன்னணி வீரராக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் முத்திரை பதித்தார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கு டாக்டர் கலைஞர் அவர்களால் அனுப்பப்பட்டு, 18 ஆண்டுகள் டெல்லியில் திராவிட இயக்கத்தின் இலட்சியக் குரலாகத் திகழ்ந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 6 ஆண்டுகள் மக்கள் அவையில் திராவிட இயக்கக் கொள்கைக் கோட்பாடுகளுக்கு ஆக்கம் தேடுகின்ற விதத்தில் பணி ஆற்றினார்.  ஒட்டுமொத்தமாக, இந்திய நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் தமிழ், இன, மொழி, சமூக, அரசியல் உரிமைகளுக்காக எவ்வித சமரசமும் இன்றி ஓங்கி முழங்கிய பெருமை வைகோ அவர்களுக்கு உண்டு.

கடல்கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

நதிநீர் இணைப்பு, மதுவிலக்கு, சாதி, மத வேறுபாடு – பூசல் நீங்குவதற்காக எனத் தமிழகம் முழுமையும் குறுக்கும் நெடுக்குமாக, ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருமை, தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டும்தான் இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட ஸ்டெர்லைட் நச்சு ஆலை, நியூட்ரினோ திட்டங்களை எதிர்த்தும், தமிழகத்தைச் சீரழித்து வரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான வேளாண்மைத் தொழிலைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றார்.

திராவிட இயக்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்தக் காலகட்டத்தில், திராவிட இயக்க எதிரிகளின் நோக்கத்தை முறியடித்து, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கும் கடமையையும், பொறுப்பையும், தனது தோள்மீது சுமந்து கொண்டு இருக்கின்ற, பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு,

ஈரோட்டில் நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா மாநாடு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

பொது வாழ்வில் நூறாண்டு கண்டு, திராவிட இயக்கத்திற்குத் தலைவர் வைகோ அவர்களின் தூய தொண்டு தொடர வேண்டும் என்று இந்த மாநாடு வாழ்த்துகின்றது..

தீர்மானம் எண். 4  :

தமிழ் ஈழத்தில் இன அழிப்புப் போர் நடந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நீதியை சர்வதேச சமூகம் அளிக்கவில்லை என்பது வேதனை தருகின்றது.

தமிழ் இனப் படுகொலையை மூடி மறைக்க முயலும் சிங்கள ஆட்சியாளர்களைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு என்பதை, கடந்த ஆண்டு 2017, செட்ம்பர் 22-ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சுட்டிக் காட்டினார்.

ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன.

2011, ஜூன் 1-ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் எடுத்து உரைத்தவாறு ‘தமிழ் ஈழம் அமைவதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; தமிழ் ஈழத் தாயகத்திலும் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 5 :

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரணை செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2018 பிப்ரவரி 16-இல் இறுதித் தீர்ப்பை அளித்தது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த 192 டி.எம்.சி. காவிரி நீரில், 14.75 டி.எம்.சி. நீரை கர்நாடக மாநிலத்திற்கு வழங்கியது போக, மீதம் உள்ள 177.25 டி.எம்.சி. நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழகத்திற்குப் பேரிடியாக அமைந்தது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு இரண்டையும் அமைக்க வேண்டும் என்று தமிழகம் போராடிக் கொண்டு இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய பா.ஜ.க. அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை 2018, ஜூன் 1-இல் அமைத்தது. அதனை ஜூன் 2, 2018-இல் அரசு இதழிலும் வெளியிட்டது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயற்படுத்தும் சட்டபூர்வ அதிகாரமிக்கதாக காவிரி மேலாண்மை ஆணையம் அமையவில்லை என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நீண்டதொரு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டி இருந்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2, 2018-இல், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் நியமனம் செய்யப்பட்டு இருந்த உறுப்பினர்களும், மத்திய அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் காவிரியில் 31 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.

ஆனால், இந்த உத்தரவைச் செயல்படுத்தாத கர்நாடக மாநிலம், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகக் கருத்து கூறியது. கர்நாடக மாநில முதல்வராகப் புதிதாகப் பொறுப்பு ஏற்ற குமாரசாமி அவர்கள், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்க மாட்டோம் என்றும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறை சாத்தியம் அற்றது என்றும் தொடர்ந்து கூறி வருகின்றார்.

தற்போது கர்நாடகாவில் பெருமழை பெய்து, அங்குள்ள அணைகள் நிரம்பியதால் உபரி நீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. ஆனால், மற்ற காலங்களில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எப்போதும் போல முரண்டு பிடித்தால், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையம் என்பது வெற்று அறிவிப்பாகி விடும்.

எனவே, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய சட்டப் பொறுப்பை,  மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 6 :

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவிலும், இராசிமணலிலும் தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடக மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றது.

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மாநில அரசு “மேகேதாட்டு அணைத் திட்டம் ரூ. 5,912 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்;  4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படும்,” என்று அறிவித்தது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக மாநிலம் காவிரியில் புதிய அணைகளைக் கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். கடந்த பிப்ரவரி 16, 2018-இல் உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் அளித்த இறுதித் தீர்ப்பிலும், “காவிரியின் தண்ணீர் மொத்தமும் தொடர்புடைய மாநிலங்களின் தேவை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றுதான் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் கர்நாடக அரசு தற்போது மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றிற்கு செயல்திட்ட அறிக்கை மற்றும் கோரிக்கையை அனுப்பி இருக்கிறது.

மேலும் இதற்காக கனகபுரா வட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் தனியார் நிலத்தைக் கையகப்படுத்த முடிவு எடுத்து இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவது குறித்து விரைவில் விவசாயிகளிடம் கலந்தாய்வுக் கூட்டங்களும் நடத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சட்டங்கள், பன்னாட்டு விதிமுறைகள் அனைத்தையும் மீறி வரும் கர்நாடக மாநிலம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு கர்நாடகம் அனுப்பிய கோரிக்கை மனுவை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடகத்தின் செயல்திட்ட அறிக்கையை தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்க முடிவு செய்து இருப்பது தமிழ்நாட்டிற்குத் திட்டமிட்டு இழைக்கப்படும் வஞ்சகம் ஆகும். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த அநீதியை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்வதுடன், கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 7 :

கடந்த 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு அணை பாதுகாப்பு வரைவு மசோதா கொண்டு வந்து மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டபோது, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் 2016-இல் மீண்டும் அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவைத் தயாரித்தது.

“ஒரு மாநிலத்திற்குள் ஓடும் நதியின் குறுக்கே அணைகளையும்,  நீர்த்தேக்கங்களையும் அந்தந்த மாநிலங்கள் கட்டிக் கொள்ளலாம்” என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகளும், நீர்த்தேக்கங்களும் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தமானது. ஆனால், மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவில், மாநிலங்களில் உள்ள அணைகள் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்ய தேசிய அணைப் பாதுகாப்பு நிறுவனத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் அணைகள் கட்டினால், அந்த அணை, கட்டிய மாநிலத்திற்குச் சொந்தமானது; அதை இயக்கவும் பராமரிக்கவும் அணை கட்டிய மாநிலத்துக்கு உரிமை ஆகும்,” என உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

ஆனால், மத்திய அரசு தயாரித்துள்ள அணைப் பாதுகாப்பு மசோதாவில் ‘அந்தந்த மாநிலத்துக்குள் இருக்கும் அணைகள் பராமரிப்பு, இயக்குதல் அதிகாரம் அந்தந்த மாநிலத்துக்குத்தான் உண்டு’ என்று கூறப்பட்டு உள்ளது.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் தமிழக அரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணைகளின் கட்டுப்பாடு தேசிய அணைப் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்பது, மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகும். தமிழக அரசின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளாமல், அணைப் பாதுகாப்பு மசோதா, 2018 சட்டவடிவம் பெறுவதற்கு கடந்த ஜூலை 13, 2018-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது.

ஜூன் 26, 2018-இல் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று அணைப் பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 8:

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் மூன்று கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்; இதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஸ்ஸல் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள், முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்கவும், அணை உடைந்தால் பேரழிவு தடுக்கப்படவும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நியமித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.எஸ். ஆனந்த், ஏ.ஆர். இலட்சுமணன், கே.டி. தாமஸ் ஆகியோர் அடங்கிய மூவர் குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை வலுவாக இருக்கின்றது; அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்; பின்னர் 152 அடி வரையும் உயர்த்தலாம் என்றும் உறுதியாகக் கூறியது.

இதனைக் கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையின்போது அலட்சியமாக இருந்ததால், உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழகத்திற்குப் பாதகமாகக் கூறியது.

இதனை அப்போதே கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் இந்த வழக்கு ஆகஸ்டு 24, 2018 அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ‘முல்லைப் பெரியாறு அணையைத் திடீரென தமிழக அரசு திறந்து விட்டதும் கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு ஒரு காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.9 அடியாகப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பெருமழையின் காரணமாகவே கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஆகஸ்டு 10 முதல் 21-ஆம் தேதி வரையில் கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், 39.10 டி.எம்.சி; ஆகஸ்டு 14 முதல் 19 வரை இடமலையாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் 7.74 டி.எம்.சி; அந்த நேரத்தில் ஆகஸ்டு 15, 16 தேதிகளில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3.27 டி.எம்.சி. மட்டுமே.

எனவே, மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள மாநிலம் கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக அரசு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டபூர்வமாக நிலைநாட்டப்பட்ட உரிமையை இழந்து விடாமல், உச்ச நீதிமன்ற வழக்கை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 9:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி பாயும் மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கிய 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சமவெளிப் பகுதிதான் காவிரிப் படுகை ஆகும்.

இது போன்ற சமவெளி ஆசியாவிலேயே வேறு எங்கும் காண முடியாது. இங்கு மொத்தம் 28 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.

கர்நாடக மாநிலம் காவிரியில் முறையாகத் தண்ணீர் திறந்து விடாததால், முன்பு 28 இலட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பு தற்போது 15 இலட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டது.

இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளை முழுமையாகப் பாலைவனம் ஆக்கும் வகையில் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போன்ற நாசக்காரத் திட்டங்களைச் செயற்படுத்த முனைந்துள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயுத் திட்டங்களால் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்குப் போய்விடும். தண்ணீரும் இரசாயனக் கலவைகளால் நஞ்சாக மாறி விடும். இதனால் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இன்றி மக்கள் வேளாண்மைத் தொழிலை இழந்து, இடம்பெயரும் நிலைமை பேராபத்தாக உருவாகும் என்பதால் மக்கள் கடுமையாக இத்திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு 2017-இல் ‘ஹெல்ப்’ (Hydrocarban Exploration Licensing Policy) என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி ஒற்றை அனுமதி மூலம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களை எடுத்துக் கொள்ளலாம் என்று உரிமம் வழங்கியது.

‘திறந்தவெளி அனுமதி’ (Open Acreage Licensing Policy) என்ற கொள்கை மூலம் தமிழகத்தின் 3 வட்டாரங்கள் உள்ளிட்ட 55 புதிய வட்டாரங்களுக்குக் கடந்த 19.1.2018-இல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதற்கு 110 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இவற்றைப் பரிசீலித்து கடந்த 28.08.2018-இல் மத்திய அரசு இறுதி செய்துள்ளது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41 வட்டாரங்கள், ஹெச் ஓ இ சி (HOEC) நிறுவனத்துக்கு 1 வட்டாரம், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ என் ஜி சி (ONGC)-க்கு 2 வட்டாரங்கள், பி பி ஆர் எல் (BPRL)-க்கு 1 வட்டாரம், கெயில் நிறுவனத்துக்கு 1 வட்டாரம், ஆயில் இந்தியாவுக்கு 9 வட்டாரங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது.

டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் செப்டம்பர் 6-ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இருக்கின்றது.

கடந்த ஜூலை 24, 2018-இல் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஒற்றை அனுமதி வழங்குவதற்காக திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து எரிபொருட்களையும் பெட்ரோலியம் என்றே அழைக்கலாம் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திட தமிழக அரசு கடந்த ஜூலை 19, 2017-இல் அறிவிக்கை வெளியிட்டு இருக்கின்றது. இங்கு பெட்ரோலிய இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals & Petrochemical Investment Regions – PCPIRS) அமைக்க மத்திய அரசு 92,160 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து இருக்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலைமைதான் உருவாகும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, மத்திய அரசு காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 10 :

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, நிலத்தடி நீர் நஞ்சாகி வேளாண்மைத் தொழில் பாதிப்பு, குடிநீரால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் கொடிய ஆட்கொல்லி நோய்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று, கடந்த 22 ஆண்டுகளாக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகத் திரண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்தனர். அவர்கள்மீது தமிழகக் காவல்துறை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 அப்பாவிப் பொதுமக்கள் பலி ஆனார்கள்.

ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மத்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஒப்புதல் இன்றி, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் ஆண்டுக்கு 8 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்து வருகின்றது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி மார்ச் 31, 2018-அன்று முடிவடைவதால் மீண்டும் ஆலைக்கு உரிமத்தைப் புதுப்பிக்கக் கூடாது என்று தனது மனுவில் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஜூன் 13, 2018 இல் நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு,

“தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடப் பிறப்பித்துள்ள தடை ஆணை தெளிவாக இல்லை, ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளது, ஆலையை மூடுவதற்குத் தீர்வாக இருக்காது;

இந்த ஆலையால் தண்ணீர், காற்று மாசுபடுவது மட்டுமின்றி தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்; சுற்றுச்சூழல் பாதிப்பைச் சரிசெய்வது மாநில அரசு சம்பந்தப்பட்டது; இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால், ஆலைக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது;

இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 48-ஏ இன்கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்; அப்படி ஒரு நிலை எடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும்; பொதுமக்கள் நலனுக்காக இந்த முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும்,”

என்று அறிவுறுத்தியது.

பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், தமிழக அரசின் அரசு ஆணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் சார்பில் டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசும் இதையே வலியுறுத்தியது.

ஆகஸ்டு 23, 2018-இல் டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு, ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த ஒரு குழுவை நியமித்தது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.கே. வசீப்தர் தலைமையில் மூன்று நபர் கொண்ட குழுவைத் தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயம் அமைத்தது. இக்குழுவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இக்குழு ஆறு வாரங்களில் ஆய்வு செய்து அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யும்; மேலும் இது தொடர்பான தொழில்நுட்பத் தகவல்களையும் ஆராயும். அதற்கான முழு உரிமை குழுவுக்கு உள்ளது; சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மனு தாக்கல் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்வதுடன்; அந்தப் பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் உண்மை நிலையையும் குழு ஆராயும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயம் கூறி இருக்கின்றது.

இந்நிலையில் இக்குழுவின் தலைவர் எஸ்.ஜே. வசீப்தர் தனிப்பட்ட காரணங்களால் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததால், முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் அவர்கள் ஆய்வுக்குழுத் தலைவராகத் தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தால் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு இரகசிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய நீர்வளத்துறை உத்தரவின்படி, மத்திய நிலத்தடி நீர் வாரியம், தூத்துக்குடியில் நிலத்தடி ஆய்வு நடத்தி, அப்பகுதியில் சுற்றுச்சூழல், நீர் மாசுபாடுகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மட்டும் காரணம் இல்லை என்று அறிக்கை தயாரித்து, அதனை செப்டம்பர் 5, 2018-இல் தமிழக அரசுக்கும் அனுப்பி உள்ளது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கவனத்திற்குத் தெரிவிக்காமல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் ஆகும். மாநில அரசை மதிக்காத மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை, வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக அரசு எந்தவிதமான நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 11 :

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் மத்திய அரசு ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைப்பதை எதிர்த்து, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், மார்ச் 26, 2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், இரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்; கடுமையான கதிரியக்க ஆபத்தும் விளையும் என்பதால் தேனி மாவட்ட மக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பல கட்டங்களாக விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டார். மார்ச் 31, 2018-இல் மதுரையில் தொடங்கி ஏப்ரல் 10, 2018 அன்று கம்பத்தில் முடிவடைந்த நடைப்பயணத்திலும் நியூட்ரினோ திட்டத்தின் பேராபத்தினை மக்களிடம் எடுத்துரைத்தார்.

முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த மேற்குத் தொடர்ச்சி மலை ‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமும்’, மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரத்திற்கு அருகே உள்ளன. எனவே, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற வேண்டும்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்’ தென்னக அமர்வு மார்ச் 20, 2017-இல் ரத்து செய்துள்ளது.

ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தைச் ‘சிறப்புத் திட்டமாக’ பிரிவு ‘B’ திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டங்களை மீறி முடிவு எடுத்தது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசின் ‘தலைமைச் செயலரை’ப் பொறுப்பாளராக நியமித்து நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துப் பணிகளைத் தொடங்கினால், மக்கள் அறப்போர்க் கிளர்ச்சி வெடிக்கும் என இந்த மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் எண். 12 :

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கேஸ் அதாரிட்டி ஆ~ப் இந்தியா லிமிடெட் (கெயில்) இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. மராட்டிய மாநிலம் தபோல் துறைமுகத்தில் இருந்து பெங்களூருவுக்கு எரிவாயு குழாய் இணைப்பு செயல்பாட்டில் உள்ள நிலையில் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நகருக்கு தமிழ்நாடு வழியாக எரிவாயு குழாய் பதித்துக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்ல ‘கெயில்’ நிறுவனம் பணிகளைத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் 310 கி.மீ. தூரம் எரிவாயு குழாய் பதிக்க சுமார் 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமைகளை 5,842 பட்டாதாரர்களிடம் இருந்து ‘பெட்ரோலிய தாதுப்பொருட்கள் குழாய் பாதை’ என்ற திட்டத்தின்கீழ் ‘கெயில்’ நிறுவனம் பெற்றது.

விளைநிலங்களில் சுமார் 20 மீட்டர் அகலம் 3 அடி ஆழத்தில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் 2013-இல் தொடங்கின. ‘எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதால் நீண்ட வேர்களைக் கொண்ட தென்னை, மா, பலா, பாழை, கொய்யா போன்றவற்றை விளைவிக்கக் கூடாது; வெங்காயம், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற ஆழம் செல்லாத வேர்களைக் கொண்ட பயிர்களையே சாகுபடி செய்ய வேண்டும்; எரிவாயு குழாய்கள் செல்லும் 20 மீட்டர் பாதையில் வீடுகள், கட்டடம், மரம், ஆழ்குழாய் கிணறு, கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது; பாதையின் ஒரு பகுதியிலிருந்து குழாய் மூலமாக விவசாயத்திற்குத் தண்ணீரை மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்ல மேற்கண்ட பாதையினைத் தாண்டியும் செல்லக் கூடாது’ என்று ‘கெயில்’ நிறுவனம் பற்பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் ஏழு மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என்று போராடினர். தமிழக அரசு ஏப்ரல் 2, 2013-இல் ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்; தேசிய நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்களைப் பதிக்க வேண்டும். விவசாயிகளிடம் பெறப்பட்ட நிலங்களைச் சமன்படுத்தி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தது.

தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘கெயில்’ நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜனவரி 17, 2014-இல் சென்னை உயர் நீதிமன்றம் ‘கெயில்’ நிறுவனத்துக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்தது. ஆனால் பிப்ரவரி 2, 2016-இல் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், ‘கெயில்’ நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியைத் தொடரலாம்; தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், மத்திய அரசின் திட்டத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து, அது இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளைத் தொடருவதற்கு தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என்று ‘கெயில்’ நிறுவனத்தின் தென் மண்டலச் செயல் இயக்குநர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விவசாயிகளின் கொந்தளிப்பைப் புரிந்து கொண்டு, ஏழு மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் ‘கெயில்’ நிறுவனத்தின் திட்டத்திற்குத் துணை போகக் கூடாது; தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல ‘கெயில்’ நிறுவனத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 13 :

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நீரோடைகள் மற்றும் துணை நதிகளைத் திருப்பி விட்டு பாண்டியாறில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோயாறுக்குத் தண்ணீரைக் கொண்டு போய் சேர்க்கும் பாண்டியாறு-புன்னம்புழாத் திட்டம் 53 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. ஆனால் தொடர் நடவடிக்கைகள் இன்றி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் மீண்டும் 2006-ஆம் ஆண்டு கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று நிறைவேறவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பாண்டியாறு-புன்னம்புழாத் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தமிழக அரசு முன் முயற்சி எடுத்து இருப்பது வரவேற்கத் தக்கது.

பாண்டியாறில் சிறிதும் பெரிதுமாக அணைகள் பல கட்டி, சுமார் 21 கி.மீ. தொலைவுக்குச் சுரங்கப்பாதை அமைத்து அதன் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் கிளை நதி வழியாக மோயாறுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்படும். சரியாகத் திட்டமிட்டுப் பணிகளைத் தொடங்கினால் நவீன தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில் மொத்தத் திட்டப் பணிகளையும் முடிக்க முடியும்.

இத்திட்டத்தின்மூலம், ஆண்டுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இந்தத் தண்ணீர் மோயாறில் இருந்து பவானிசாகர் அணைக்குப் போய்ச் சேரும். பவானிசாகர் அணை பாசனத்துக்குப் போக மீதம் தண்ணீர் இருந்தால், அதை பவானி கூடுதுறையில், காவிரி ஆற்றில் கலக்கச் செய்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் பயன்படுத்த இயலும்.

எனவே, கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்று பணிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 14 :

மத்திய அரசின் ‘பாரத்மாலா பிரயோஜனா’ திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்கு பிப்ரவரி 25, 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 277.3 கி.மீ. தூரத்திற்குச் செயற்படுத்தப்படும் பசுமை வழிச் சாலை, சென்னை தாம்பரம் முதல் சேலம் நகரின் அரியானூர் வரையில் – காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகின்றது.

இச்சாலையை அமைக்க, 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், 500 ஏக்கர் வனப்பகுதி மற்றும் 8 மலைகளை அழிக்க வேண்டிய நிலை இருப்பதாக வாழ்வாதாரத்தை இழக்கும் பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்திற்காக, சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி மலை, வேதி மலை உள்ளிட்ட மலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மலைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைச் சூறையாடும் வகையில் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயற்படுத்தப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

இயற்கை வளம் அழிவதுடன், முப்பது ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக, ஐந்து மாவட்டங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடத்தி வருவதை அலட்சியப்படுத்துவதும், போராடும் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்குவதும், அ.இ.அ.தி.மு.க. அரசின் எதேச்சாதிகாரத்தைப் பறைசாற்றுகின்றது.

வெகு மக்களுக்குப் பயன் அளிக்காத, பெரு நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக மத்திய அரசு செயற்படுத்தத் துடிக்கும் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தைத் தமிழக அரசு வலிந்து செயற்படுத்த முனைவதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கண்டனம் தெரிவிப்பதுடன், மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளித்து இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மூன்று வழித்தடங்களை விரிவுபடுத்தத் திட்டமிட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 15 :

தமிழகத்தில் பல ஆண்டுகாளக காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வரைமுறையின்றி மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, இயற்கை வளம் சூறையாடப்பட்டு வருகின்றது. இதனால் ஆற்றுவளம் அழிவதோடு தற்போது அணைகளும் இடிந்து விழும் நிலை உருவாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 182 ஆண்டுகள் பழமை மிக்க மேலணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மதகுகள் உடைப்புக்கு வினாடிக்கு 2 இலட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் சென்றதால் அரிப்பு ஏற்பட்டதுதான் காரணம் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது.

ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்கள், 1836-ஆம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீரைத் திருப்பிடக் கட்டிய மேலணை மிகவும் வலிமையானது.

வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டதால், அணைப் பகுதிகளில் 30 அடி முதல் 40 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டு, அதனால் உண்டான அரிப்புதான் அணை உடையக் காரணம் ஆயிற்று.

இதே நிலை தமிழகத்தில் உள்ள மற்ற ஆறுகளின் அணைகளுக்கும் நேராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மணல் கொள்ளையை அறவே ஒழித்துக் கட்டி, செயற்கை மணல், ‘எம் சாண்ட்’ உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளைப் பரவலாக்கிடவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க அயல்நாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கு ஊக்கம் அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 16 :

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமையான கருத்து உரிமை, பேச்சு உரிமையைப் பறிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. அரசு சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் செயல்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.

மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு ஜனநாயக முறையில் அறப்போர் நடத்துவதைக் கூடச் சகிக்காமல் காவல்துறையை ஏவி குண்டாந்தடி தர்பார் நடத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்துவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

2018, மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி அமைதியாகப் பேரணி நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறை மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரின் உயிரைக் குடித்த ‘ரௌலட்’ தர்பாரை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி அரசை மன்னிக்கவே முடியாது.

தமிழகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டம், மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதால், பாதிக்கப்படும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெண்களும், வயது முதிர்ந்தோரும் அறப்போராட்டம் நடத்தச் சென்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தும், வீடுகளுக்குக் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவதும் அ.இ.அ.தி.மு.க., அரசின் ‘போலீஸ் ராஜ்ய’ அட்டூழியத்துக்குச் சான்று ஆகும்.

தமிழகத்தில் மணல் கொள்ளையை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் சமூகப் போராளி தோழர் முகிலனை ஓராண்டாகச் சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்வதையும், மத்திய அரசின் தமிழ் இன விரோதப் போக்கையும், பொருளாதாரக் கொள்கை, மதவெறிக் கூட்டத்தின் வன்முறைகள் போன்றவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோதத் தடுப்புச் சட்டம் போன்றவற்றை ஏவி, நீதிமன்ற உத்தரவையும் மீறி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.

அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் கோட்பாட்டுக்கும், அ.இ.அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அ.இ.அ.தி.மு.க., அரசின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, ‘அடக்குமுறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அதனைக் கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 17 :

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் சந்தி சிரிக்கும் ஊழல்களால் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டு வருகின்றது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளில் இலஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது. இது வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசுப் பணியாளர் நியமனம், துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது.

குட்கா போதைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளித்ததில், தமிழக அமைச்சர், காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகின்றது. குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பதவிநீக்கம் செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதால், ஆட்சியில் நீடிக்கும் தார்மீக அருகதையை இந்த அரசு இழந்து விட்டது.

ஊழலை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘லோக் ஆயுக்தா’ சட்டம் ஒப்புக்காகக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் விசாரணை நடத்துவதற்கும், அரசு ஒப்பந்தப் பணிகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிப்பதற்கும் ஏற்ற வகையில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 18 :

தமிழ்நாட்டில் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கான பதவிக்காலம் 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவு அடைந்து விட்டது. 2016, அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று தி.மு.கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அவர்கள், கடந்த 2016 அக்டோபர் 4-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து அந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் புதிய அறிவிப்பு ஆணை வெளியிட உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமமோகனராவ், எஸ்.எம். சுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை 2017, மே 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கெடு விதித்து கடந்த 2017, பிப்ரவரி 21-இல் உத்தரவிட்டது.

அதன் பிறகு ஜூலை 31, 2017-க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனிடையே பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றமே காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தி.மு.க., மற்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு 2017 மார்ச் மாதம் முதல் விசாரித்தது.

கடந்த 2017, செப்டம்பர் 4-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2017, நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு ஆணையை 2017, செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும்,” என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கெடு விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி, 2017, செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை என்று தி.மு.க.ழகத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையர் எம். மாலிக் ~பெரோஸ்கான் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ். ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இருவரும் உயர் நீதிமன்றத்தில் நேர்நின்று விளக்கம் அளித்தனர்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞரிடம் நீதிபதிகள், “உள்ளாட்சித் தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தேர்தலை நடத்தக் கூடாது என எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லையே!” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த வழக்கறிஞர், “வார்டு மறுவரையறைப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னர்தான் தேர்தல் நடத்த முடியும்,” என்று கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. “இதே காரணத்தைத்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கூறி வருகின்றீர்கள்; உங்களுக்காக இந்த அமர்வு மீண்டும் மீண்டும் கூட முடியாது; உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை ஆகஸ்டு 6, 2018-இல் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிடில் மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்,” என எச்சரித்தனர்.

ஆனால், ஆகஸ்டு 6, 2018 அன்று மாநிலத் தேர்தல் ஆணையம் ‘உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் இரண்டு மாத காலம் ஆகும்’ என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

உள்ளாட்சித் தேர்தலைக் குறித்த காலத்திற்குள் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குப் பெற வேண்டிய உள்ளாட்சி நிதி ரூ. 3,500 கோடி கிடைக்காமல் உள்ளாட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டு இருக்கின்றது.

உள்ளாட்சி நிர்வாகத்தைத் திட்டமிட்டுச் சீரழித்து வரும் அ.இ.அ.தி.மு.க., அரசுக்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு ஆணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 19 :

கடந்த ஆண்டு 2017, நவம்பர் 29-ஆம் தேதி இரவிலும், மறுநாள் 30-ஆம் தேதி பகலிலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய ‘ஒக்கி’ப் புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவக் கிராமங்களில் வாழும் 80 ஆயிரம் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் ‘ஒக்கி’ புயல் குறித்து உரிய எச்சரிக்கை செய்யாததால் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன கொடுமை நிகழ்ந்தது.

புயலில் சிக்கிய மீனவர்கள் மீட்பதற்கு இந்திய அரசின் கடலோரக் காவல்படை உடனடி நடவடிக்கைகளில் இறங்காததால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மாயமானார்கள். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு மீனவர் சமூகத்தைக் கொந்தளிக்கச் செய்தது. காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக சரியான கணக்கெடுப்பு நடத்தப்படவும் இல்லை என்று மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

‘ஒக்கி’ புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்குத் தகுந்த மறுவாழ்வுத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடித் தொழிலை விட்டு அவர்களை வெளியேற்றும் சதித்திட்டத்தை இலங்கை அரசு ‘கடற்தொழில் சட்டத் திருத்தம்’ மூலம் நடைமுறைப்படுத்த முனைந்து இருக்கின்றது. எல்லைத் தாண்டி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், படகுகளைப் பறிமுதல் செய்யவும், இலங்கை ரூபாய் மதிப்பில் 50 இலட்சம் முதல் 17.5 கோடி வரையில் அபராதம் விதிக்கும் வகையிலும் இலங்கை கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கின்றது.

சிங்களக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடரும் நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிராக இத்தகைய கொடிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து இருக்கின்றது. இச்சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய எச்சரிக்கை செய்து, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 20:

2016, மே மாதம் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்றபோது ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், அ,இ.அ.தி.மு.க., அரசோ ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் அவரது வாக்குறுதியைச் செயற்படுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டைச் சீரழித்து வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டங்களில் இறங்குவது நாள்தோறும் செய்தி ஆகிவிட்டன.

சாலை விபத்துக்கள், சட்டம்-ஒழுங்கு சீர்க்குலைவு மற்றும் சமூக சீரழிவுக்குக் காரணமாக உள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைத் செயற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 21 :

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர், இந்துத்துவ, மதவெறிச் சக்திகள் நடத்தி வரும் வன்முறைகளும், சிறுபான்மை இனத்தவர் மற்றும் தலித் மக்கள் மீது திட்டமிட்டு ஏவி விடப்படும் தாக்குதலும் எல்லை மீறி விட்டன.

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கும் மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து வருகின்றனர்.

‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மதவாத கும்பல் நடத்தும் தாக்குதல்களைத் தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல; இது பற்றியெல்லாம் வாய் திறக்கவே இல்லை.

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அலட்சியப்படுத்தும் வகையில்தான் பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் செயல்களும் இருக்கின்றன.

பா.ஜ.க. அரசின் இந்துத்துவா ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் விமர்சிப்போரைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்தும், தேசப் பாதுகாப்புச் சட்டம் 124-ஏ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் பூட்டுவதும் தொடருகின்றன.

கடந்த ஜனவரி 1, 2018-இல் மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பீமாகோரேகான் கிராமத்தில், தலித் இராணுவ வீரர்கள் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றியபோது நடைபெற்ற போரில் 500 பேர் கொல்லப்பட்ட 200-ஆவது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர். அவர்கள் மீது இந்து மதவெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலம் முழுதும் தலித் மக்கள் ஆவேசமாகக் கிளர்ந்து எழுந்தனர்.

இந்த எழுச்சிக்கு வித்திட்ட ‘எல்கார் பரிசத்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ரோனா வில்சன், சுதிர் தவாலே, சுரேந்திரா கட்லிங், சோமாசென், மகேஷ் ரவுத் ஆகிய ஐவரை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று, ‘ஊ~பா’ சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் மாதம் கைது செய்து, பிரதமரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று மத்திய அரசும், மராட்டிய மாநில பா.ஜ.க., அரசும் குற்றம் சாட்டின.

இதே வழக்கில், ஆகஸ்டு 28-ஆம் தேதி மனித உரிமை செயல்பாட்டாளர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களுமான திருமதி சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, புரட்சிக் கவிஞர் வரவரராவ், வழக்கறிஞர் வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரைரா ஆகிய ஐவரைக் கைது செய்து, அவர்களை நக்ஸல் ஆதரவாளர்கள் என்றும், பிரதமர் மோடியைக் கொல்லச் சதித்திட்டம் வகுத்தார்கள் என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டி இருக்கின்றது.

நாடு முழுவதும் மோடி அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஏற்கனவே இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இந்துத்துவக் கும்பல் பகிரங்கமாக மிரட்டுவதும், அதற்கு பா.ஜ.க. அரசு துணை போவதும் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்.

மத்திய அரசு மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சக்திதான் வலிமை மிக்கது என்பதை உணர வேண்டும். இல்லையேல் இந்நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் எண். 22 :

இந்தியாவின் கூட்டு  ஆட்சிக் கோட்பாட்டுக்கு ஊறு நேரும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த நான்கு ஆண்டு காலமாக மாநில அதிகாரங்களைப் பறித்து அவற்றின் உரிமைகளை நசுக்கி வருகின்றது.

திட்டக்குழு கலைக்கப்பட்டு இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம் (நிதி ஆயோக்) ஏற்படுத்திய பின்பு மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றது.

குறிப்பாக மாநில அதிகாரங்களின் பட்டியலில் உள்ள சுகாதாரம், விவசாயம், தொழில்துறை மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள கல்வி உள்ளிட்டவற்றில் உலகமயமாக்கல், சந்தை வர்த்தகத்திற்கு ஏற்ப மையப்படுத்தப்பட்ட திட்ட உருவாக்கங்களை நிதி ஆயோக் செயற்படுத்த முனைகிறது. இதனால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோய் இருக்கின்றன.

நிதிக் குழுவுக்காக உருவாக்கப்பட்ட ஆய்வு வரம்புகள், அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டு ஆட்சியின் விழுமியங்களுக்கும் மாநிலங்களுக்கும் உள்ள நிதிச் சுதந்திரத்துக்கும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வை 14-ஆவது நிதி ஆணையம் 32 விழுக்காடு என்பதிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு 4.9 விழுக்காட்டிலிருந்து 4.02 விழுக்காடாகக் குறைந்து, ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்யப்படும் என 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும்.

பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மாநிலங்களின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது. எனவே, மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமைகளையும், நிதிச் சுதந்திரத்தையும் தட்டிப் பறிக்க முயலக் கூடாது.

மத்திய அரசின் முகவர் போன்று மாநில ஆளுநர் அரசியல் சட்ட மரபுகளை மீறி ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவது, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது; இத்தகைய நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்திக்கொள்ள  வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 23 :

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே போவது பொருளாதாரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆகச் சரிந்து இருக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை ரூபாயின் செலாவணி மதிப்பு 8 விழுக்காடு அளவுக்குக் குறைந்து விட்டது.

2014-இல் மோடி அரசு பதவி ஏற்றபோது நான்கு இலட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் வாராக்கடன் அளவு தற்போது 10.5 இலட்சம் கோடியாக அதிகரித்து இருக்கின்றது.

பெரு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாததால் பொதுத்துறை வங்கிகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

2016-17 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 விழுக்காடாக இருந்தது; 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 விழுக்காடாகச் சரிந்து விட்டது. பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலைகள் உடனடியாக சரிபடுத்திட முடியாதது ஆகும். இதே நிலைமை நீடிக்குமானால் இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் போய்விடும் என்று முன்னாள் நிதி அமைச்சர் திரு. யஷ்வந்த் சின்ஹா, பொருளாதார அறிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான அமார்த்தியா சென், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் விலைவாசி அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கின்றது. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு உற்பத்தி வரியாக கடந்த 4 ஆண்டுகளில் 11 இலட்சம் கோடி ரூபாய் வசூலித்து பகல் கொள்ளை அடித்துள்ளது.

கடந்த 4 ஆண்டு காலமாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில்துறை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, பொட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்புக்கு வழி செய்யாத திட்டங்கள், பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் ஆகியவற்றால் நாட்டைப் பாழ்படுத்தி வரும் பா.ஜ.க. அரசை வீழ்த்த மக்கள் ஆயத்தமாக வேண்டுமென என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.

தீர்மானம் எண். 24 :

இந்து – இந்தி – இந்து ராஷ்டிரா என்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் இருந்து கிளைத்து எழுந்த பா.ஜ.க., தனது ஆட்சியில் ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே கலாச்சாரம் – ஒரே உணவுப் பழக்கம் – ஒரே வரி என்று அனைத்தையும் ஒற்றைக் கலாச்சாரமாக்கி, தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து திட்டங்களை உருவாக்கி வருகின்றது.

2017, மார்ச் 31-ஆம் தேதி, ஆட்சிமொழிச் சட்டம் 1963-ஐப் பயன்படுத்தி, இந்தித் திணிப்புக்கு 117 பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் செயற்படுத்த முனைந்துள்ளது.

நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்; அதற்கு முன்னோட்டமாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்;

இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், பள்ளிகளில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் இந்தி மொழியில் வாய்ப்பு இருக்க வேண்டும்; அதேபோன்று அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இந்தி படிக்க வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்; ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் 50 விழுக்காடு இந்தி நூல்கள் வாங்கிட வேண்டும்; இந்தி மொழியில் புலமை பெற்றுள்ள மத்திய அரசு ஊழியர்களை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைப் பதவி உயர்வு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்பன போன்ற ‘இந்தித் திணிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா.வில் அலுவல் மொழியாக இந்தி மொழியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர பல கோடி ரூபாய் செலவிடவும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகின்றது.

வடமொழி சமஸ்கிருதத்தை அனைத்து நிலைகளிலும் திணித்து ‘சமஸ்கிருதமயமாக்கல்’ கொள்கையைச் செயற்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கின்றது.

சென்னை ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், அரசு விழாவில் சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுதல், வேதக் கல்வி வாரியத்தை அமைத்து சமஸ்கிருத மொழியை வளர்ப்பது, சமஸ்கிருதம்தான் தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் தாய் என்று ஆரியப் புரட்டை நிலைநாட்டுவது, சமஸ்கிருத மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த குருகுலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறது.

நாட்டின் பன்முகத் தன்மையைத் தகர்க்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு முயற்சிகளுக்கு இம்மாநாடு, வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 25 :

மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வைப் புகுத்தி, தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவைத் தகர்த்த பா.ஜ.க. அரசு, மாநிலங்களின் கல்வி உரிமையை மத்திய அரசின் ஏகபோக அதிகாரமாக ஆக்கிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017, பிப்ரவரியில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமலும், குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யாமலும், தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு வஞ்சகம் இழைத்து வருகின்றது.

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை நாடுவதற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்திடும் வாய்ப்பு பெற்ற மாணவர்களால் மட்டுமே முடியும் என்ற நிலைமையை உருவாக்குவது கல்வித் துறையில் சமமற்ற நிலையை ஏற்படுத்தி விடும்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 26 :

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. அரசு கருத்துரு ஒன்றை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கின்றது.

இந்த ஆண்டின் இறுதியில் மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று மாநிலங்களிலோ அல்லது ஏதாவது ஒரு மாநிலத்திலோ பா.ஜ.க. ஆட்சியை இழந்தால், பா.ஜ.க.விற்கு எதிராக ஒரு மாற்று அடையாளப்படுத்தப்படும். இதனைத் தவிர்க்கவே ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை பா.ஜ.க. முன் வைக்கின்றது.

அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், தேர்தல் செலவுகள் மிச்சம் ஆகும்; வளர்ச்சிப் பணிகள் பாதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருப்பது உள்நோக்கம் நிறைந்த கருத்து ஆகும்.

ஒருவேளை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 2015-இல் தேர்ந்து எடுக்கப்பட்ட பீகார் சட்டமன்றம், 2017-இல் தேர்ந்து எடுக்கப்பட்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் கர்நாடகச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் சட்டப்படி இருக்கிறதா?

1977, 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால், அந்த அரசுகள் நீடிக்க முடியாமல் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அப்போது, மாநிலச் சட்டமன்றங்கள் அனைத்தையும் கலைக்க முடியுமா?

எனவே ‘ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை, பா.ஜ.க. அரசு கைவிட வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 27 :

கடந்த 2018, ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிக்கையில், 2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 இலட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2017-18 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 17 ஆயிரத்து 981 ஆகக் குறைந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஆண்டில் 49,329 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக சுமார் 5 இலட்சத்து 19 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி (GST), சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் பண மதிப்பு நீக்கத்தால் சந்தித்த நெருக்கடிகள், மூலப் பொருட்கள் விலையேற்றம், ஆட்சியாளர்களின் பாராமுகம், இலஞ்ச, ஊழல் போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி முதலீடுகள் சிறு தொழில் துறையில் இருந்து வெளியேறி இருக்கின்றது.

தமிழக ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல்களால் வாகனங்கள் தயாரிப்புத் தொழில் துறையில் 18 ஆயிரம் கோடி முதலீட்டிலான ‘கியா’ வாகன ஆலை, ரூ. 1,800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ், ரூ. 1,600 கோடி முதலீட்டில் ஹீரோ மோட்டார்ஸ் ஆலை, ரூ. 350 கோடியில் அசோக் லேலண்ட் வாகன ஆலை, டி.வி.,எஸ். நிறுவனத்தின் சுந்தரம் பிரேக்ஸ் நிறுவனம், பாரத் போர்ஜ் நிறுவனம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று விட்டன.

2017-ஆம் ஆண்டில் வெறும் 1,574 கோடி மட்டுமே முதலீடாக வந்து இருக்கின்றது.

தொழில்துறை வீழ்ச்சி குறித்து அ.இ.அ.தி.மு.க., அரசு அக்கறை இல்லாமல் அலட்சியம் காட்டுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், தொழில்துறை சீரமைப்புக்குத் தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 28 :

கோவையில் உள்ள பொறியியல் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் தொழில்துறையினர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பொருள்களில் 70 விழுக்காடு இந்த மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறுந்தொழில் கூடங்களுக்குப் பணி ஆணை (Job Order) கொடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி., வந்தபோது பணி ஆணைகளுக்கு 18 % வரி விதிக்கப்பட்டது. இதில் பணி ஆணை மேற்கொண்டு அளித்து வரும் குறுந்தொழில் கூடங்கள் ஆண்டுக்கு 20 இலட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் மேற்கொண்டால் அவர்களுக்குப் பதில் பணி ஆணை கொடுப்பவரே 18 % வரியை அரசுக்குச் செலுத்த வேண்டும். ரூ. 20 இலட்சத்துக்கு மேல் பணி ஆணை பெறுகின்றவர் 18 % வரியைக் கூலித் தொகையுடன் இரசீதில் போட்டுக் கொள்ளலாம்.

அத்தொகையைப் பணி ஆணை கொடுப்பவர் செலுத்த வேண்டும். ஏற்கனவே மூலப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விற்பனை செய்யும்போது ஜி.எஸ்.டி. ஆகியவை அமலில் உள்ளபோது, பணி ஆணைகளுக்குச் செலுத்தும் வரியும் சேர்ந்து கொள்வதால் தொழில்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசுக்குத் தொடர்ந்து இதனை வலியுறுத்தியதால் ஜி.எஸ்.டி., கவுன்சில், பணி ஆணைகளுக்குச் செலுத்திய 18 % வரியைத் தொழில்துறையினர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதனால் கடந்த ஓராண்டாக 18 % வரியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கையில் வரி செலுத்தி வந்தனர். சிலர் அத்தொகையைப் பெற்றுள்ளனர்; பெரும்பாலோர் இன்னமும் பெறவில்லை.

இந்நிலையில் கடந்த 2018, ஜூன் மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சில் பணி ஆணைகளுக்குச் செலுத்திய 18 % வரியைத் திரும்பப் பெற முடியாது; திரும்பப் பெற்றவர்களும் 18 % வரியைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்; அதைக் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த ஜூலை மாதத்திலிருந்தே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய நடைமுறையால், கோவை மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரம் சிறு தொழிற்கூடங்களில் பணி ஆணை கிடைக்காமல் மூட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பணி ஆணைகள் (Job Order) மீதான 18 % ஜி.எஸ்.டி.,யை நீக்குவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 29 :

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்ட பின் ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், கேரள அரசு ஒப்புதல் தர மறுக்கின்றது. கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

அத்துடன் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து வெளிவரும் நீரால், ஏழு குளம் பாசனம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஏழு குளங்கள் கடந்து உப்பாறு அணைக்கும் நீர்வரத்து இருந்தது. கேரள மழையின் காரணமாக ஆனைமலையாறு-நல்லாறு நீரானது விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது குளங்களைத் தூர்வாரி நீர் ஆதாரத்தை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 30 :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காகத் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டமாக இத்திட்டம் அமையும் என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பல்வேறு அரசியல் காரணங்களால் காலதாமதம் ஆகி வருகின்றது. இத்திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 31 :

அமராவதி நதியின் நீர் ஆதாரமாக விளங்கும் பாம்பாறு நதியில் மறையூர் அருகே கேரள அரசு தடுப்பு அணை கட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 32 :

தேங்காய் நார் உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான வசதி தமிழகத்தில் இல்லை. தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை சீனா, தைவான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசும், மாநில அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து, தென்னை நாரில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் தென்னை உற்பத்திப் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 33 :

அண்மையில் கடும் மழைப் பொழிவில் சிக்கி ஆற்றொணாத் துயரில் உள்ள கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருள் உதவிகளைச் செய்தது. ஆனால், பெருமழைக்குப் பின் பிளாஸ்டிக் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் மிக அதிக அளவில் கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டப்படுகின்றது. தமிழக அரசு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 34:

தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனங்களால் தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் உழவர்களின் விளைநிலங்களின் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டங்களை  புதை வடங்களாக மாற்றி (கேபிள்கள்) உழவர்களைப் பாதிக்காத வகையில் மத்திய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக மாற்று வழியில் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என இந்த மாநாடு மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 35:

கோவை மாவட்டம் ஆணைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாளியூர், செம்மேடு மத்தியபாளையம், தீத்திப்பாளையம், எட்டிமடை, வால்பாறை மற்றும் சிறுமுகை போன்ற வனப்பகுதி அருகில் உள்ள கிராமங்களில், காட்டு யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் ஆடு மாடுகளைத் தாக்கியும், பயிர்களை அழித்தும் சேதம் செய்கின்றன. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

எனவே, வனத்துறையில் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கிட வேண்டும். வன விலங்குகள் தாக்குதல் தொடராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
ஈரோடு

 

 

இரங்கல் தீர்மானம் 1:

டாக்டர் கலைஞர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக அரை நூற்றாண்டுக் காலம் பொறுப்பு ஏற்று, வழிநடத்திய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழ் கூறும் நல்உலகத்தைக் கண்ணீர் மழையில் நனையவிட்டு மறைந்தார்கள்.

தந்தை பெரியாரின் ஈரோட்டுக் குருகுலத்தில் வடித்து எடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வாளாகவும் கேடயமாகவும் விளங்கிய தம்பியருள் முதன்மையானவராய் விளங்கினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். என் தம்பி அடைபட்டுக் கிடக்கும் சிறைச்சாலை நாங்கள் புனித யாத்திரை செல்லும் திருத்தலம் என்று பேரறிஞர் அண்ணா புகழ்ந்துரைத்தார்.

தோல்வியே காணாத வெற்றி வீரராக, 1957 ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்று இருந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின்னர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பு ஏற்று தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றினார்.

இந்தியாவிலே மத்திய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான் கலைஞர் அவர்களால் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்திற்கு என்று தனியான ஓர் திட்டக் குழுவை அமைத்ததும் கலைஞர் அரசுதான். குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் முதலில் அமைத்ததும் முதல்வர் கலைஞர்தான்.

திராவிட இயக்கத்தின் உயிர் ஆதாராமான கொள்கையான சமூக நீதியை நிலைநாட்ட, பிற்படுத்தப்பட்டோர், தாழ்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தினார். தமிழகம் தொழில்துறையில் வளர்ச்சி அடையவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கவும், திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார்.

இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார்,                  பெண்களுக்குச் சொத்து உரிமைச் சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் தந்தார். இறுதி மூச்சு உள்ளவரையில் தமிழ், தமிழ் இனம், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காகத் தொண்டு ஆற்றினார். திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களுக்கு எதிரான சக்திகள் தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்காமல், இந்துத்துவா மதவெறி சக்திகளை எதிர்த்தும் வலுவாக குரல் எழுப்பினார்.

தலைவர் கலைஞரின் மறைவு திராவிட இயக்கத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகத் தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

பார் போற்றும் தலைவர் கலைஞருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முப்பெரும் விழா மாநில மாநாடு புகழ் அஞ்சலி செலுத்துகின்றது.

இரங்கல் தீர்மானம் 2:

அடல்பிகாரி வாஜ்பாய்

இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலில் தனித்துவம் மிக்கத் தலைவராகப் புகழ் பெற்றவர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஆவார். 50 ஆண்டுக் காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள், மக்கள் அவைக்கு ஒன்பது முறையும், மாநிலங்கள் அவைக்கு இரண்டு முறையும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். நாட்டு விடுதலைக்குப் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் வாஜ்பாய் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அளவற்ற பாசம் கொண்டு இருந்த வாஜ்பாய் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பேரன்புக்குரியத் தோழராக விளங்கியவர்.

1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது ஜனநாயகச் சுடரைக் காப்பாற்றச் சிறை சென்றார்.

மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்று, சீரிய முறையில் பணி ஆற்றினார். பாகிஸ்தானோடு நல்லுறவு அரும்பக் காரணமாக இருந்தார். நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்று இருந்த ஆறு ஆண்டு காலத்தில் இமயம் முதல் குமரி வரை தங்க நாற்கர சாலைத் திட்டத்திற்கு வழிகோலினார். இந்தியாவின் வலிமையை உலக அரங்கில் பறைசாற்ற, பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் துணிந்து நடத்தினார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட வாஜ்பாய் அவர்கள், அவரது கோரிக்கையை ஏற்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியார் மயம் ஆகாது என்று பிரகடனம் செய்தார். ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியத் தலைவராக விளங்கினார்.

அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் மறைவு, இந்திய நாட்டுக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முப்பெரும் விழா மாநில மாநாடு, அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துகின்றது.

Related Posts