மும்பையில் கனமழை நீடிக்கும் எச்சரிக்கை

மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வந்த நிலையில், சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ரயில், பஸ், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. மேலும் ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts