முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் 29ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து 29ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து, நாள் ஒன்றுக்கு, விநாடிக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே போல் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 29ம் தேதி முதல் 120 நாட்களுக்கு, விநாடிக்கு 300 கன அடி வீதம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக நாளை முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Posts