முல்லை பெரியாறு அணையில் 139 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கலாம் : உச்ச நீதிமன்றம்

           முல்லை பெரியாறு அணையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 139 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கலாம்       என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                முல்லை பெரியாறு அணையில், 142 அடிக்கு தண்ணீர் தேக்கி வைப்பது தொடர்பான பிரச்னை குறித்து, சமீபத்தில்,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முல்லை பெரியாறு அணைக்கு அதிக தண்ணீர் வரத்து இருந்ததாகவும், அதனால்,இடுக்கி அணையில் இருந்து, திடீரென தண்ணீர் திறந்து விடநேரிட்டதாகவும், இதுவே, கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்,139 அடிக்கு தண்ணீரை தேக்கி வைத்திருந்தால், இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் அந்த மனுவில்கூறப்பட்டது.

      இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், இடுக்கியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல எனவும், கேரளா தான் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,  பெரியாறு அணையில், இடுக்கி அணைக்கு  தமிழக அரசு 2 டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விட்டது எனவும், ஆனால், அதற்கு முன்னரே, இடுக்கி அணையிலிருந்து 14 டிஎம்சி தண்ணீரை கேரளா திறந்துவிட்டது எனவும் அந்த மனுவில்குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே கேராளா வெள்ளத்திற்கு தமிழகத்தை குற்றம் சாட்டுவது ஏற்க முடியாது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முல்லைப்பெரியாறு அணையில் 139 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கலாம் என கூறி உத்தரவிட்டனர்.

Related Posts