மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை : ஜூன்-24

நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிரர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திமுகவினர் நேற்று முயற்சித்தனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அப்போது தடுத்து நிறுத்தப்பட்டதால், தர்ணாவில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மு.க. ஸ்டாலின் உள்பட திமுகவினர் ஆயிரத்து 111 பேர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்துவது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Posts