மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் 25 பேர் கைது

திருவண்ணாமலை அருகே, குழந்தை கடத்தும் கும்பல் என்று கருதி மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில், 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 25 பேரை கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை : மே-10

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் குடும்பத்தினர், குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக, சொந்த ஊரான போளூர் அருகே கம்புகொட்டான்பாறைக்கு காரில் சென்றனர். அத்திமூர் சோதனைச்சாவடி அருகே காரை நிறுத்தி கிராமத்தினரிடம் வழி கேட்டபோது, அங்கிருந்த 4 வயது பெண் குழந்தைக்கு ருக்மணி சாக்லேட் வழங்கினார். சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், குழந்தை கடத்தும் கும்பல் என கருதி, ருக்மணி குடும்பத்தினர் சென்ற காரை, கழியம் கிராமத்தில் வழிமறித்து கிராம வாசிகள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், 60 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, 25 பேரை கைது செய்த காவல்துறையினர், மற்றவர்களைத் தேடி வருகின்றனர். காவல்துறையினரின் கைதுக்கு பயந்து கிராம வாசிகள் ஊரையே காலிசெய்துவிட்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts