மெக்சிக்கோ எல்லையில் மதில் எழுப்ப தடையில்லை அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்புத்துறை நிதியை பயன்படுத்தி, மெக்சிக்கோ எல்லையில் மதில் எழுப்ப தடையில்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப டிரம்ப் நிர்வாகம் 5 புள்ளி 7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்ட நிலையில், 1புள்ளி 4 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.

இதனால் பாதுகாப்புத்துறை நிதி, ராணுவ கட்டுமான நிதி உள்ளிட்டவற்றை எல்லைச் சுவர் எழுப்ப பயன்படுத்தும் நோக்கில், அதிபர் டிரம்ப் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தார்.

பாதுகாப்புத்துறை நிதியிலிருந்து 2.5 பில்லியன் டாலர்களை பயன்படுத்துவதற்கு எதிராக American Civil Liberties Union என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து எல்லையில் சுவர் எழுப்ப பாதுகாப்புத்துறை நிதியை பயன்படுத்த, விசாரணை நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது. மேல்முறையீட்டிலும் இந்த தடை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கீழ் நீதிமன்றங்கள் விதித்த தடையை, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

. பாதுகாப்புத்துறை நிதியை பயன்படுத்தி, எல்லையில் சுவர் எழுப்ப ஏற்கெனவே வழங்கப்பட்ட 4 ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணிகளை தொடங்கலாம் என டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Related Posts