மெஜாரிட்டி இல்லாததால் கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டிஇல்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கர்நாடகா : மே-19

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுனர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக, பிற்பகல் 3.30 மணியளவில் அவை கூடியது. அப்போது உருக்கமாக உரையாற்றிய எடியூரப்பா, பெருவாரியான கர்நாடக மக்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தனர் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் கர்நாடக மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே அவர் தமது பதவி விலகலை அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை சென்ற எடியூரப்பா தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் ஒப்படைத்தார். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்ந்த்தால் பாஜக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் வெடி வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts