மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 3- வது நாளாக நீடிப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் 3பேர், ஸ்டேசன் கண்ட்ரோலர்கள் 2பேர் டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் ஒரு இளநிலை பொறியாளர் உள்பட 8 பேர் சேர்ந்து தொழிலாளர் நல சங்கத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் 8 ஊழியர்களும் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அவர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான மெட்ரோ ரயில் ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .  பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாகும்.  இதனால் கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில்களை இயக்கி வருவதாகவும், மெட்ரோ ரயில் சேவை சீராக உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இதனிடையே சென்னை தொழிலாளர் நல அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் பணியாளர், தொழிலாளர் நல ஆணையம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோரிக்கைகள் தொடர்பாக நேற்று  பேச்சுவார்த்தை நடத்தியது. 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவாத்தையின்போது 8 ஊழியர்களின் பணிநீக்க ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்ற தொழிலாளர்களின் தரப்பு கோரிக்கையை ஏற்க மெட்ரோ நிர்வாகம் பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம் பணியாளர்களின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு செயலாளர் சௌந்தரராஜன் 8 ஊழியர்கள்  பணிநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மெட்ரோ நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை எனவும் தெவித்தார்.

Related Posts