மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

நேற்று மாலை விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 103 கனஅடியாகவும்,   நீர்இருப்பு 69.85 டிஎம்சியாக-யாகவும் இருந்தது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக நேற்று மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாகவும், நீர் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது.

Related Posts