மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கனிசமாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கேஆர்எஸ் அணை முழு கொள்ளளவை எட்டி விட்டதால், பாதுகாப்பு கருதி விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 31 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும் விநாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் இன்று இரவுக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், விரைவில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர்  அணைக்கு, நேற்று விநாடிக்கு 10,235 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நீர் வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாகவும், நீர்இருப்பு 87.00 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. இதனிடையே, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts