மேட்டூர் அணை நாளை திறக்கப்படும்: சேலம் ஆட்சியர் ரோகிணி

 

 

105அடியை தாண்டிய மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திறந்து வைப்பார் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை முழு கொள்ளவை எட்டியதால், இரு அணைகளில் இருந்தும் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரத்து 277 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவியையே மூழ்கடித்துக் கொண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை நிலவரப்படி 105 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் மேட்டூர் அணையில் இன்று ஆய்வு செய்தனர். அணைக்கு வரும் நீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மேட்டூர் அணை நீர்மட்டம் போதிய அளவுக்கு உயர்ந்துள்ளதால், நாளை காலை பத்தேகால் மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.

Related Posts