மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 2.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நீர்திறப்பு குறித்து அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2.35 லட்சம் கனஅடியில் இருந்து 2 லட்சம் கனஅடியாக குறைந்ததுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 105.64 அடியாகவும், நீர் இருப்பு  72.34 டிஎம்சியாகவும், நீர்வரத்து 2,00,000 கனஅடியாகவும், நீர் திறப்பு 10,000 கனஅடியாக உள்ளது.

இந்நிலையில் முக்கொம்பு அணையை பார்வையிட்ட பொதுப்பணித்துறை பொறியாளர், தண்ணீர் திறந்துவிட்டால் விவசாயிகளுக்கு விவசாயம் பாதிக்காத அளவிற்கு அரசு போதிய அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு தற்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மேட்டூர் அணை டெல்டா மாவட்ட சாகுபடிக்காக திறக்கப்பட்டதை அடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்து கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுதுறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Related Posts