மே தின நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்களுக்கு   உளமார்ந்த மே தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கணக்கில்லா வேலை நேரம், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினம் மே தினம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,தொழிலாளர் பெருமக்கள் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும் தான் இன்றைய நவீன உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதற்குரியதாகும் என்றும் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில் தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Posts