மே-12 : உலக செவிலியர் தினம் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

 

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த செவிலியர் தின வாழ்த்துக்களை மதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்வதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து”

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையைத் தந்த  திருவள்ளுவர் போதிக்கின்றார்.

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சிக் கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொலுடனிவர் வலி கொடாத பேரை
ஏதேது செய்வானே

குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவிச்சி (தாதி) ஊதியத்தையும், தீர்க்க முடியாத பெரிய நோயைக் குணப்படுத்திய மருத்துவர் ஊதியத்தையும், இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி சொல்லும் சேதி.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவச் சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவச் சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி. இராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள். இதை நினைவுகூர வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820-ஆம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாகும்.

பிளாரன்Þ நைட்டிங்கேல் மறைவிற்குப் பின்பு அவரது தன்னலமற்ற பணிகளை நினைவுகூர ஆண்டுதோறும் மே திங்கள் 12-ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்குக்கு ஒளி ஏற்றி அந்நாளில் அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும். ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும்.

செவிலியர் தினத்தின் முக்கியத்துவத்தை அறியாத தமிழக முதலமைச்சர், கடந்த 10 ஆம் தேதியே செவிலியர் தினத்துக்கு வாழ்த்துக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, செவிலியர் தினத்தன்று உரிய முறையில் கௌரவிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய – மாநில அரசுகள் மே-12 ஆம் நாளில் அவர்களது பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும். புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். 

Related Posts