மே 14ம் தேதி காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்: மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் 14ம் தேதி காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளதால் மே14-ம் தேதி மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் கூறப்பட்டது.  இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மே 14ம் தேதி காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.. காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதி அளித்தார். அந்த வரைவு திட்டம் காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறுபெயரிலான அமைப்பா என்பது வரும் 14 ஆம் தேதி தான் உறுதியாக தெரியவரும்.

Related Posts