மைக் பாம்பியோ, வரும் 7-ந் தேதி  வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளார்

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் 7-ந் தேதி  வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

            உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்த வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா  பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில்  தென்கொரியா எடுத்த முயற்சியின் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனிடையே அண்மையில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வரும் 7-ந் தேதி அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Posts