மோடிக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் தொடரும் : வைகோ

தமிழகத்திற்கு துரோகம் செய்த நரேந்திர மோடிக்கு எதிரான  கருப்பு கொடி போராட்டம் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர்,  விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றும்,  அது பற்றி விசாரித்த பிறகே கருத்து  கூறமுடியும் என்றும் தெரிவித்தார்.  எந்த நிலையிலும் போர் வரக்கூடாது என்பதுதான் தன்னுடைய கருத்து என்ற வைகோ,  அப்படி வந்தால் இருநாடுகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தார்.  பாசிச தன்மை கொண்ட நரேந்திர மோடி அதிகாரத்தை இழக்க முற்பட மாட்டார் என்ற வைகோ,  தமிழகத்திற்கு துரோகம் செய்த நரேந்திர மோடிக்கு எதிரான  கருப்பு கொடி போராட்டம் தொடரும் என்று உறுதிபட கூறினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, முகிலனுக்கு ஏதாவது நேரிட்டால் காவல்துறையும் தமிழக அரசுதான் பொறுப்பு என்றும்   தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணத்தை முழுமையாக அறிந்தவர் முகிலன்  என்றும்  குறிப்பிட்டார்.  அதற்காகவே  அவரை கடத்தி உள்ளனர் என்றும்  ஸ்டெர்லைட்  படுகொலையை திட்டமிட்டு வகுத்துக் கொடுத்து, தமிழக அரசும், காவல்துறையும் கூலிப்படையாக செயல்பட்டு உள்ளன என்றும் வைகோ சாடினார்.

 

Related Posts